ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமல்ல… இந்த X-ம் தான்!

ஆப்பிள் கம்ப்யூட்டர் என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வரும் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால் ஸ்டீவ்விற்கு வேறொருவர்தான் கண் முன் நிற்பார். எல்லோரும் ஸ்டீவ்விற்காக காத்திருக்க இவர் அந்த இன்னொருத்தருடன்தான் பொழுதுகளை கழித்தார். நீங்கள் நினைப்பது போல அந்த X ஸ்டீவின் காதலி அல்ல. அதற்கும் மேலே. ஆன்மிகத் துணைவர் (Spritual Partner). ஆம் அப்படிதான் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஜோனதன் ஐவியை (Jonathan Ive) பற்றி ஸ்டீவ் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்ஜாப்ஸ் மற்றும் ஜோனதன் ஐவி

உலகத்தில் எந்த நிறுவனத்திலும் அதுவரை அப்படி ஒரு பதவி இல்லை. Chief Design Officer என்ற இந்த ஒரு பதவி சொல்லிவிடும், ஏன் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் உலக தரத்தில் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது என்பதை. ஜோனாதனின் தந்தை ஒரு வெள்ளி பொற்கொல்லர். சிறுவயதில் இருந்தே அப்பாவின் ஆலையில் உடன் திரிவார். வெள்ளியை உருக்கி அழகிய கலைபொருட்கள் செய்யும் அப்பாவின் தொழில் நேர்த்தியும், கலை நயமும், அதற்கு அவர் செலவிடும் பொறுமையும் அருகில் இருந்தே காணும் வாய்ப்பு பெற்றது பின்னாளில் ஐவியின் வடிவமைப்பு பணியிலும் வெளிப்பட்டது.

ஸ்டீவ் ஆப்பிளை விட்டு வெளியில் இருந்த நாள்களில் ஐவி தற்காலிக பணியாளராக சேர்கிறார். அவரது வடிவமைப்பு அதுவரை இருந்த ஆப்பிள் தயாரிப்புகளுக்கு முற்றிலும் முரணாக புதியதாக இருந்தது. நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்படுகிறார். அதே நேரத்தில் ஸ்டீவ் மீண்டும் தலைமை பதவிக்கு வருகிறார். ஆப்பிளின் தலையெழுத்து புதியதாக எழுதப்படுகிறது. 1998 ஆம் வருடம் இந்திய சுதந்திர தினத்தில் ஐவி வடிவமைத்த முதல் கணினி iMac என்ற புது பிராண்ட் பெயரில் வெளிவருகிறது. அதுவரை கறுப்பு அல்லது வெள்ளையில், கூர்மையான ஓரங்களுடன் வந்து கொண்டிருந்த கணினிகள் மத்தியில் வெள்ளி நிறத்தில், ஒரு பெண்ணின் வளைவை போல மிருதுவான ஓரங்களுடன், தேவைக்கு அதிகமாக இடத்தை அடைக்காமல் வந்து எல்லோரையும் மயக்கியது. கூடவே Macintosh OSகள் உலகத் தரத்தில் வடிவமைப்பட்டு, உயரிய ப்ரோசசர் என்று எல்லாம் கூடி வர மக்கள் “வராதுவந்த மாமணியே” என்று ஆவென்று பார்க்க அத்தனை அதிக விலை இருந்தபோதும் முதல் ஐந்தே வாரத்தில் 800,000 ஐமேக் கணினிகள் விற்கப்பட்டன.

ஆப்பிளின் பொருட்கள்

அடுத்து ஜோனாதனின் வடிவமைப்பில் ஆப்பிள் ஒரு சின்ன மீனை விட்டுப் பார்க்கிறது. அது ஒரு கணினி வன்பொருள் நிறுவனம் செய்யாத முயற்சி. அது தான் ஐபாட் (Ipod). அப்போது உலகம் சோனியின் வாக்மேன் காலத்தில் இருந்து டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருந்தது. Jukebox, AT&T FlashPAC, iAudio என்று பல நிறுவனங்கள் மியூசிக் ப்ளேயர்களை வெளியிட்டு வந்தன. கையடக்க கருவியாக இருந்த மியூசிக் ப்ளேயரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் ஒரு பட்டனுக்கு கொஞ்சம் பெரிதாக விரலிடுக்கு கருவியாக கொண்டுவந்தது. இளைஞர்களின் கையில் ஒரு சிறு தீக்குச்சியாக சேர்ந்த அந்தக்கருவிதான் காட்டுத்தீயாக பரவி அதுவரை நொண்டி அடித்துக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளை செங்குத்தாக மேலே செல்ல வைத்தது.

அதற்கு அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பும் ஆப்பிள் நிறுவனத்தை உலக நிறுவனங்களின் உச்சியில் கொண்டு சேர்த்தது. அப்படி என்ன மேஜிக் செய்தது ஆப்பிள்? இங்கு தான் அதன் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. இணைய மென்பொருளில் பயன்திறனை மிக எளிமையாக கொடுத்து வெற்றி பெற்ற நிறுவனம் கூகுள் என்றால் அதையே வன்பொருளில்(Hardware) மிக கச்சிதமாக, அழகாக வடிவமைத்து, கூடவே அதற்கேற்ற செயலியையும்(Operating System) நுணுக்கமான அழகான வடிவத்தில் கொடுத்து இதைவிட சிறந்த ஒன்று இருக்க முடியுமா என்ற அளவுக்கு ஒவ்வொரு தயாரிப்பையும் படைத்து வெளியிட்டது ஆப்பிள்.

விண்டோஸ் கணினிகள் விலை குறைவு. அவையும் பயன்திறன் கொண்ட வடிமைப்பினால் மட்டுமே பெருவெற்றி பெற்றவை. ஆனால் அதற்கும் மேலே ஒரு செயலியை படைத்து அதை அழகிய கணினியுடன் உலகத் தரத்தில் கொடுத்து வெற்றி பெற்றது ஆப்பிள். ஜோனாதன் குழுவில் வெறும் 15 பேர் மட்டுமே வேலை செய்வார்கள். ஒவ்வொருவரும் ஒரு தேசம். அவர்களின் டிசைன் லேப் தனியே இருக்கும். ஆப்பிளின் ஒரு சில தலைமை அதிகாரிகளை தவிர்த்து யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. யாரும் அவர்களை தொந்தரவு தரக் கூடாது என்பது ஸ்டீவின் கட்டளை. அவரது கட்டளையே சாசனம் இன்றும்.

தினமும் ஐவியை சந்திக்கும் ஸ்டீவ் ஒரு கேள்வியை தினமும் கேட்பாராம். இன்று எத்தனை No சொன்னீர்கள் என்று? இதன் அர்த்தமானது ஒரு பொருளின் வடிவமைப்பில் படைப்பாளி அத்தனை எளிதில் திருப்தி அடைந்துவிடக் கூடாது. இதற்கு மேல் வடிவமைக்க ஒன்றும் இல்லை என்ற நிலை வரும்வரை நீயே அதை நிராகரி என்பது தான். ஆகவே ஐவி நிறைய முறை No சொன்னேன் என்றால் ஸ்டீவ் மகிழ்ச்சி அடைவாராம்.

ஆப்பிள் ஷோரூம்

உலகின் உச்சத்தில் இருக்கும் ஒவ்வொரு வடிவமைப்பாளருக்கும் ஒரு வடிவமைப்பு தத்துவம் இருக்கும். அது அவர்களின் படைப்பில் வெளிப்படும். அந்த வகையில் ஐவிக்கு அவர் அப்பாவின் வெள்ளி உருக்கு கலைதான் அவரது படைப்பூக்கத்தின் தூண்டுதலாக இருந்தது. சிலருக்கு கடல், வானம், பெண்ணின் உடல், மலைகள், காடு, மேகம், கணிதம் என்று ஏதோ ஒன்றாக இருக்கலாம். அவர்கள் எல்லா டிசைனையும் அவர்கள் அந்த கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்கள் கொண்டுவருவார்கள். அது மிகச் சிறந்த யுத்தி.

ஐவி பணியில் சேரும்போது பங்குச்சந்தையில் ஆப்பிள் பங்கின் விலை 0.62 டாலர் (இந்திய மதிப்பில் 40 ரூபாய்) மட்டுமே. இன்று அது 10140 ரூபாய். இந்த இருபது வருடத்தில் கிட்டத்தட்ட 25000% வளர்ச்சி. அசுர வளர்ச்சி என்பார்களே அதுவும் பொய்த்து ராக்கெட் வளர்ச்சி. இது மைக்ரோசாப்டை விட இரு மடங்கு அதிகம். காரணம் அமெரிக்காவில் படிப்பு, வீடு, கார் என்பதை போல ஆப்பிள் போன் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்

ஸ்டார்ட்அப் பாடம்

எந்த ஒரு தயாரிப்பு (Product based Company) நிறுவனத்துக்கும் மிக அடிப்படை வடிவமைப்பு. நீங்கள் எதை தயாரித்தாலும் அதில் மிகச்சிறந்த பயன்திறன் மற்றும் உலகத்தரத்தில் நேர்த்தி இருந்தால் அது அதிக விலை வைத்து இருந்தாலும் பெருவாரியான மக்களைச் சென்று மிகப்பெரிய வெற்றியை பெரும்.

உங்கள் பொருள் சந்தைக்கு செல்லும் முன் இதற்கு மேலும் வடிவமைப்பில் செய்ய எதுவுமில்லை என்ற அளவுக்கு செதுக்கவேண்டும். ஆப்பிள் கணினி மற்றும் மொபைல் போன்களின் செயல்பாட்டில் சில குறைகள் இன்றும் இருக்கிறது. ஆனால் வடிவமைப்பில் எந்தக் குறையும் காண முடியாது. அது தான் அதன் பிரமாண்ட வெற்றிக்கு காரணம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)