உலகையே தெறிக்க விட்ட ஸ்டார்ட்அப்… ஜாக்பாட் அடிச்ச கூகுள்!

அது உலகை உள்ளங்கையில் ஆட்டிப் படைத்து வருகிறது. அதை நீங்களும் நானும் கூட உபயோகிக்கிறோம். கோடி ரூபாய் பெறுமானமுள்ள தொழில்நுட்ப பொருட்களை அது இலவசமாக கொடுத்து வருகிறது. டெர்மினேட்டர் திரைப்படத்தில் வரும் ஜெனிசிஸ் போல எங்கும் வியாபித்து இருக்கும். இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம் ஆண்ட்ராய்டு மொபைல் செயலி தான் அது. ஆண்ட்ராய்டு என்ற அந்த ஒரு ஸ்டார்ட்அப் பல லட்சக்கணக்கான ஸ்டார்ட்அப் உருவாக காரணமாகி இருக்கிறது. அது தான் சிறப்பிலும் மிகச் சிறப்பு என்பேன்.

ஸ்டார்ட்அப்

ஆண்டிரூபின் என்ற ரோபாட்டிக் எஞ்சினியரின் அறிவுக்குழந்தை தான் ஆண்ட்ராய்டு. அவர் ஆப்பிள் உட்பட பல உயர்தொழில்நுட்ப எலெக்ட்ரானிக் நிறுவனங்களில் வேலை பார்த்தார். அதில் கிடைத்த அனுபவத்தில் நண்பர்களுடன் டேஞ்சர் என்ற மொபைல் டிவைஸ் ஸ்டார்ட்அப்பை 1999இல் துவக்குகிறார். டேஞ்சர் என்ற பெயரே பயங்கர அதிரடியாக இருக்கிறதல்லவா? அவர்களின் தயாரிப்புகளின் அதிரடி தான் Touch Screen உடன் கூடிய Qwerty கீபோர்ட், Side-Flip மாடல் (பார்ப்பதற்கு பழைய நோக்கியா Communicator போல இருந்தது). அவர்களது போன்கள் பல புதிய பயன்பாடுகளுடன் மிகக் குறைந்த விலையில், குறிப்பாக ப்ளாக்பெர்ரியை தோற்கடிக்க பிறந்த மாடல் போல வந்தது. ஆனால் நான்கு வருடத்திற்குள் சக பார்ட்னர்களுடன் கருத்துவேறுபாடு காரணமாக 2003இல் வெளியேறுகிறார் ஆண்டிருபின். ( 2008இல் டேஞ்சர் மைக்ரோசாப்டை ஈர்க்க, உடனே ஒரு விலை பேசி பேரத்தை முடித்துவிடுகிறார்கள் என்பதும் பின்னர் மைக்ரோசாப்ட் டேஞ்சரின் சிலபல உரிமைகளை Xiomiக்கு விற்றுவிட்டு மூடிவிட்டது என்பதும் தனிக்கதை )

டேஞ்சர் நிறுவனத்தில் வெளியில் வந்தவர் தன் பெயரில் கொஞ்சம் எடுத்து ஆண்ட்ராய்டு என்ற மொபைல் செயலி நிறுவனத்தை துவக்குகிறார். ரிச்மைனர், க்றிஸ் ஒயிட், நிக் சியர்ஸ் என்ற மூன்று எஞ்சினியர்களுடன் இணைந்து நிறுவனத்தை வளர்த்து எடுக்கிறார். ஆரம்பத்தில் இது டிஜிட்டல் கேமராக்களுக்கு செயலிகள் எழுதும் நிறுவனமாகத்தான் இருந்தது. ஆனால் அதில் பெரிய சந்தை இல்லை உணர்ந்த இவர்கள், பொதுமக்கள் அனைவருக்குமான மொபைல் சந்தைக்கு தேவையான செயலியை உருவாக்குகிறார்கள்.

ஆண்ட்ராய்டின் பெயர் அப்போது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. மொபைல் டிவைசிற்கு தேவையான சாஃப்ட்வேரை தான் தயாரிக்கிறார்கள். செயலி(Operating System) தயாரித்து கொண்டிருப்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது நீண்டகாலத் தயாரிப்புகள் அவை. உடனடி லாபம் ஈட்டக்கூடிய கண்டுபிடுப்புகள் அல்ல. ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் இரண்டு இணைந்த தயாரிப்பு வேறு. அதனால் நிறைய செலவு இருந்தது.

ரூபின் இந்த ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு முன்வரை பல பெரிய நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வசதியுடன் வாழ்ந்தவர் தாம். இதை தொடங்க பலமுறை முயற்சித்து தள்ளிப்போட்டு டேஞ்சர் என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் துவங்கி அதில் அவரது கனவை நிறைவேற்ற முடியாமல் தான் ஆண்ட்ராய்டை துவங்கினார். மிகக்கடுமையான போராட்டத்தில் முக்கால் கடலைத் தாண்டி விட்டார். இன்னும் கொஞ்ச நாளில் அவரது கனவுகுழந்தை பிறந்துவிடும். ஆனால் கையில் பணம் சுத்தமாக இல்லை. வங்கி இருப்பு, கிரெடிட்கார்ட் எல்லாம் மைனசில் இருக்கிறது. அந்த சமயம் இவர்களின் நிர்வாகத்திற்கு தேவையான நிதி இல்லை. சரியான சமயத்தில் நண்பர் வெறும் 10000 டாலர்களை எந்தவித எதிர்பார்ப்பின்றி கொடுத்து உதவுகிறார். நிறுவனம் இன்னும் கொஞ்சம் தாக்குப்பிடிக்கிறது.

இது தான் ஸ்டார்ட்அப்பின் சிக்கலான கட்டம். பூஜ்ஜியத்திற்கும் ஒன்றிற்கும் உள்ள தூரம் தான் அதிகம். ஒன்றில் இருந்து நூறை அடைவது சுலபமே. ஒவ்வொரு ஸ்டார்ட்அப் கதையிலும் ஒரு கடும்நெருக்கடி காலத்தை பார்க்கலாம். அந்த நெருக்கடி காலத்தை கடந்தவர்கள் தான் வெற்றியை தொடுகிறார்கள்.

காலத்திற்கு இவரின் போராட்டம் புரிந்ததோ என்னவோ அந்த அதிசியம் நிகழ்ந்தது. Google நிறுவனம் இவர்களைப் பற்றி அறிந்து பேச்சுவார்த்தைகள் நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்கு தெரிகிறது எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டின் தேவை என்ன என்பது. நிறுவனத்தை வாங்க முயற்சிக்கிறார்கள். நிறுவனம் வளரும் ஆரம்பகட்டத்திலேயே விலைக்கு கேட்டதால் மிகக் குறைந்த விலைக்கு ஆண்ட்ராய்டு கூகிளுடன் இணைகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்டிரூபின் மற்றும் இதர வல்லுனர்களும் கூகிளில் இணைந்தார்கள். வெறும் 50 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்ட இந்த நிறுவனம் தான் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் அள்ளிக்கொண்டு போகப் போகிறது என கூகுள் கூட நினைத்துப்பார்த்திருக்குமா தெரியவில்லை. இன்று ஆண்ட்ராய்டு மதிப்பு மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய்களை தாண்டும் என்று கணக்கிடுகிறார்கள். ஆகவே தான் ஸ்டார்ட்அப் உலக வல்லுனர்கள் இதை உலகின் மிகச்சிறந்த கையகப்படுத்துதல்(acquisition) என்று வர்ணிக்கிறார்கள்.

ஆண்ட்ராய்டு

உலகின் மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் 83% ஆண்ட்ராய்டு மட்டுமே. 140 கோடி மக்கள் இதை உபயோக்கிறார்கள். கூகுளின் மொத்த வருமானத்தில் 60% க்கும் அதிகமாக இதன் மூலம் தான் வருகிறது. இன்னும் இது அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

Software as a Platform (SaaP) வகைக்கு இது ஒரு சிறந்த உதாரணம். இவர்கள் இதை ஒப்பன் சோர்ஸ் ஆக எல்லா மொபைல் நிறுவனங்களுக்கும் திறந்துவிட்டார்கள். இதனால் இது பல நிறுவனங்களால் பலவாறாக மெருகூட்டபட்டு, குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் பெருவாரியான சந்தையை அடைந்தது. அது இன்டர்நெட் பயன்பாட்டின் பெரும்பகுதியை மொபைலுக்கு மாற்றியது

மொபைல் சந்தையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற Nokia, Motorolla போன்ற பெரிய மொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும், சாம்சங், ஜையோமி, மைக்ரோமாக்ஸ் போன்ற எண்ணற்ற ஆசிய நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெறவும் காரணம் ஆண்ட்ராய்டின் வருகை தான். இன்று மோனோபாலி தொழில்நுட்பம் கொண்ட ஆப்பிள் போனின் சந்தையையும் கபளீகரம் செய்துவருகிறது.

ஆண்டிரூபின் அன்று நெருக்கடியான காலகட்டத்தில் தாக்குபிடிக்காமல் போயிருந்தால் சாமானியர்களின் கையில் ஸ்மார்ட்போன்களின் தொழில்நுட்பம் சென்று சேர்ந்திருக்குமா என்பதும் அதன் பயனாக உருவாகிய எண்ணற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியிருக்குமா என்பதும் சந்தேகமே

ஸ்டார்ட்அப் பாடம்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

என்பார் வள்ளுவர். தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக மனம் தளராமல் கடும்விரதம் இருப்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்

சுருக்கமா சொல்லணும்னா எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து நம்பிக்கையோடு உழைக்கிறவங்க உலகத்தை தெறிக்க விடுவாங்க.. ஆண்டிரூபின் போல.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)