ஒரு நிராகரிப்பின் பிரமாண்ட பதிலடி..! வாவ்… வாட்ஸ்அப் வரலாறு!

ஒரு தொழில்முனைவோராக மட்டுமல்ல வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் எவரும் ஒருமுறை வாட்ஸ்அப்பின் கதையை படித்துவிடுவது நல்லது. அதில் அத்தனை பாடங்கள் உள்ளன. 2007ஆம் ஆண்டில் யாகூவில் இருந்து இரண்டு இளைஞர்கள் விலகுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

பிரையன் அக்டன் (Brian Acton) , ஜான் கோம் (Jan Koum) என்ற அந்த இளைஞர்கள் அந்தப் பயணத்திற்கு பிறகு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய இலக்கை நோக்கி முயல்கிறார்கள். 2008இன் இறுதியில் அமெரிக்காவில் வைரலாக பரவிக்கொண்டிருந்த ஃபேஸ்புக்கில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். நிராக்கரிப்பட்டது என்று பதில் வந்தது. அந்த வருடத்தில் வேறு எந்த வேலைக்கும் முயலவில்லை. அவர்களின் ப்ரோபைலுக்கு நிச்சயம் ஐடி நிறுவனங்கள் வேலை கொடுக்க தயங்கபோவதில்லை. இருந்தபோதும் கிடைத்த வேலைக்கு சென்று வாழ்கையைக் காப்பாற்றிக்கொள்ள துடிக்கவில்லை. என்ன செய்தால் பெரிய வெற்றியாக இருக்க முடியும் என்று ஆராய்ந்தார்கள்.

அந்த சமயத்தில் Iphone அமெரிக்காவின் இளைஞர்களின் நவயுக அடையாளமாக சென்று சேர்ந்திருந்தது. AppStoreஇல் மற்றவர்களும் ஆப் செய்து வெளியிட திறந்துவிடப்பட்டது. அது அவர்களை கவர்ந்தது. அலெக்ஸ் பிஷ்மேன்(Alex Fishman) என்ற இன்னுமொரு நண்பரையும் அழைத்து ஆலோசிக்கிறார்கள். மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மொபைல் ஆப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு ஐபோன் டெவலப்பர் ஒருவர் வேண்டும். இவர்கள் சர்வர் உள்ளிட்ட பின்புல தொழில்நுட்பத்தில் வல்லவர்கள். பிஷ்மேன் ஒரு ரஷ்யாவை சேர்ந்த மொபைல் ஆப் தொழில்நுட்ப வல்லுனரை கண்டுபிடிக்கிறார். எல்லாம் தயார். பிறகென்ன ஜான்கோம் தன்கையில் இருந்த சேமிப்பை வைத்து வாட்ஸ்அப் என்று பெயர் வைத்து தங்கள் ஸ்டார்ட்அப்பை பதிவு செய்கிறார்.

நினைத்ததுபோலவே நடந்துவிட்டால் வாழ்வில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? இவர்களது ஆப் எக்கச்சக்க பிழைகளை கொண்டு அடிக்கடி நின்று விட்டு செமையா கடுப்பேற்றும். ஒருகட்டத்தில் இதை நிறுத்தி விட்டு மீண்டும் வேலைக்கே சென்றுவிடலாமா என்று ஜான்கோம் நினைத்ததுண்டு. ஆனால் நண்பர் ப்ரையன் அக்டன் “இரு… அவசரப்படாதே. இன்னும் சில மாதங்கள் பல்லை கடித்துக்கொண்டு பொறுத்திருப்போம். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்” என்றாராம். இது தான் எல்லா ஸ்டார்ட்அப்பிலும் பொதுவாக நடக்ககூடியது. சிலர் மீண்டும் வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். சிலர் தங்களது கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு வந்திருக்கிறார்கள்

அந்த சமயத்தில் ஆப்பிள் ப்ளேஸ்டோரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுதான் Push Notification. உங்கள் வாட்ஸ்அப்புக்கு அல்லது மெயில் ஐடிக்கு ஒரு மெசேஜ் வந்தால் டொயிங் என்ற சத்தத்துடன் ஒரு சின்ன ஐகான் வருமே அதுதான். உடனே அந்த நுட்பத்தை தங்கள் ஆப்பில் கொண்டுவருகிறார்கள். வாட்ஸ்அப்2.0 இந்த வசதியுடன் கூடிய மெசேஜ் ஆப்பாக வருகிறது. வெளியிட்ட சில நாட்களில் 250000 பயனர்கள் பயன்படுத்த தொடங்க வேகம் எடுத்தது வாட்ஸ்ஆப். ஆக்டன் தனது யாகூ நண்பர்களின் துணை கொண்டு 250,000$ டாலர் முதலீட்டை திரட்டுகிறார். இன்னும் சிலரை வேலைக்கு எடுக்கிறார்கள். ப்ளாக்பெர்ரி போனுக்கும் இந்த ஆப்பை கொண்டுவருகிறார்கள்.

நிறையபேர் உள்ளே வந்து லோடு அதிகமாகி சர்வர் பழுதாகாமல் இருக்க இலவச ஆப்பாக இருந்ததை கட்டணமாக மாற்றுகிறார்கள். அப்படி இருந்தும் பயனர்களின் வரத்து குறையவில்லை. 2011 ஆண்டுவாக்கில் ஆப்பிள் ப்ளேஸ்டோரில் Top 20க்குள் வருகிறது.

இப்போது முதலீட்டளார்களின் கவனம் படுகிறது. கம்பெனியின் 15 சதவீத பங்கிற்கு 8 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது. இன்னும் சிலரை வேலைக்கு எடுத்து மற்ற ஆண்டிராய்ட், நோக்கியா சிம்பியன் உள்ளிட்ட பிற மொபைல் செயலிகளுக்கும் வாட்ஸ்அப் வெளிவருகிறது. அந்த ஒரு வருடத்தில் மட்டும் இருபது கோடி பயனர்கள் உள்ளே வருகிறார்கள். ஏற்கனவே முதலீடு செய்த செக்குயா கேபிட்டல் இன்னும் 50 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவே மீண்டும் இலவச சேவையாக மாற்றுகிறார்கள்.

போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி வர, ஒரு பெரும் கூட்டம் வெற்றிவேல், வீரவேல் என்று களம் இறங்குகிறது. வேற யாரு? எல்லாம் நம்ம இந்திய மக்களே. உலகிலேயே வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்தும் தேசம் இந்தியா தான். இருபது கோடியில் இருந்து அறுபது கோடி பயனாளர்களுக்கு ஒரு பெரிய ஜம்ப் இந்தியர்களின் புண்ணியத்தில்.

வாட்ஸ்அப்

வாட்ஸ் அப் க்ரூப் விதிகள்

அடுத்த முதலீட்டு சுற்றுக்கு வாட்ஸ்அப் தயாரானது. இதற்கு மேல் இவர்களை விட்டுவைத்தால் நம்மை காலி செய்துவிடுவார்கள் என்று ஒரு நிறுவனம் யோசித்தது. அது தான் பேஸ்புக். மொத்தமாக நிறுவனத்தை வாங்க விலை பேசியது. 19.3 பில்லியன்களுக்கு ஒத்துக்கொண்டது வாட்ஸ்அப். உலகிலேயே மிக அதிகமாக விலைக்கு விற்கப்பட்ட ஸ்டார்ட்அப் என்ற பெயரை பெற்றது வாட்ஸ்அப். சும்மாவா.. கிட்டத்தட்ட 1,20,000 கோடிகள். காரணம் வாட்ஸ்அப் நாளையே ஒரு சமூகவலை தளத்தை கொண்டுவந்தால் பேஸ்புக் தான் முதலில் அடிவாங்கும் என்ற சூழல் அப்போது.

பேஸ்புக் இவற்றை மொத்த பணமாக கொடுக்க முடியாது என்பதால் நான்கு பில்லியன்களுக்கு பணமாகவும், மீதியை பேஸ்புக்கின் ஷேராகவும் கொடுத்தது, ஆறு வருடங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கு.

ஸ்டார்ட்அப் பாடம்:

நிராகரிப்பு என்பது இழப்பு அல்ல வாய்ப்பு. நிராகரிக்கப்பட்டவுடன் தலைகுனிந்து கீழே பார்ப்பதுதான் இழப்பு. மேலே பார்த்தால் அங்கே ஒரு அருமையான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

அதேபோல ஸ்டார்ட்அப் முயற்சியில் நினைத்தது நினைத்ததுபோல நடக்கவில்லை என்றால் தோல்வி அல்ல. அதைவிட இன்னும் சிறப்பாக நினை என்று உங்கள் ஸ்டார்ட்அப் சொல்கிறது என்று யோசியுங்கள். பிராமாண்டமான வெற்றி அங்கு தான் கிடைக்கும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)