நவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-1

ஒரு திருவிளையாடல் கதையை ஞாபகப்படுத்துகிறேன். நாரதர் ஞானப்பழத்தை கொண்டுவந்து சிவனிடம் கொடுப்பார். சிவன் பார்வதியிடம் கொடுப்பார். பார்வதி பிள்ளைகள் சாப்பிடட்டும் என்பார். கொடுத்தால் முழுதாக கொடுக்கவேண்டும் இல்லையேல் கொடுக்க கூடாது பலனில்லை என்பார் நாரதர். போட்டி வைக்கிறார்கள் உலகை சுற்றிவர. முருகன் மயிலில் கிளம்பி உலகை சுற்ற கிளம்ப, விநாயகரோ கேள்வி மேல் கேள்வி கேட்டு உலகை சுற்றிவர உபாயம் கண்டுபிடிக்கிறார். அம்மையப்பனை சுற்றி, உலகை சுற்றிய கணக்கு காட்டி ஞானப்பழத்தை தட்டிச் செல்கிறார். இதில் விநாயகர் செய்தது டிஜிட்டல் மார்கெட்டிங், முருகன் செய்தது வழக்கமான மார்கெட்டிங் அவ்வளவு தாங்க.

முதலில் வழக்கமான மார்கெட்டிங்கில் என்னென்ன வருமென்றால் ரேடியோ, டிவி, நாளிதழ், பிட் நோட்டிஸ், போஸ்டர், வீட்டுவீடிற்கு சென்று சந்திப்பது, வாடிக்கையாளர் கூட்டம் இப்படி நிறைய சொல்லலாம். இதில் நிறைய செலவு பிடிக்கும். இதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று மார்கெட்டிங் கம்பெனியிடம் கேட்டீர்கள் என்றால் குத்துமதிப்பா என்று தான் ஆரம்பிப்பார்கள். இந்த குத்துக்கு என்ன மதிப்பு என்று கேட்டீர்கள் என்றால் தெறிக்க ஓடிவிடுவார்கள்.

ஆனால் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் அப்படியெல்லாம் குன்ஸ் குன்ஸாக அடித்துவிட முடியாது. துல்லியமாக இத்தனை பேரை சேர்ந்திருக்கிறது என்று புள்ளிவிவரத்துடன் படம் போட்டு காமித்துவிடும். இதற்கு Google Analytics, Facebook Insights, Twitter Analytics என்று அந்தந்த சமூகவலை தளங்களே நிறைய தந்துவிடுகின்றன. அதுபோக இன்னும் நிறைய Online Tools இருக்கின்றன.

டிஜிட்டல் மார்கெட்டிங்கில் தான் இன்றைய உலகின் அரசியல் மாற்றங்களும் அடங்கி இருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முதன்முறையாக வெற்றிபெற அவர் 60% வழமையான தேர்தல் பிரச்சார உத்திகளும், 40% டிஜிட்டல் மார்கெட்டிங்கும் செய்தார். அதற்காக அவரது குடியரசு கட்சி நிறையவே செலவழித்தது. இவரும் பல வழிகளில் அதை டிஜிட்டல் மார்கெட்டிங்கும் செய்து வெற்றி பெற்றார். இரண்டாம் முறையும் அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டத்திற்கு முக்கியகாரணமே டிஜிட்டல் மார்கெட்டிங் தான் என்றானது. 60% டிஜிட்டல் மார்கெட்டிங்கிலும் 40% வழமையான தேர்தல் பிரச்சாரங்களிலும் செலவழித்தார். இம்முறை ஒபாமாவிற்கு பணம் செலவழிக்க அவரது கட்சியினர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. விட்டாரா தலைவர். டிஜிட்டல் விஸ்வரூபம் எடுத்தார். அவரது இணையதளத்திலேயே தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு நிதியுதவி கோரினார். நீ ஒரு உண்மையான அமெரிக்கன் என்றால் நிதியுதவி செய், என்னை தேர்ந்தெடு என்பது போல மறைமுகமாக அழுத்தம் கொடுத்தார்.

அந்தநேரத்தில் அவர் மீது பெரிய குற்றச்சாட்டு எதுவுமில்லை. 2009இல் அமெரிக்கா பொருளாதார சரிவு அடைந்தபோது அதை சிறப்பாக கையாண்டு நாட்டை மீட்டார் என்பதை தவிர பெரிய சாதனையும் இல்லை. முந்தைய தேர்தலில் மாற்றம் என்று பிலிம் காட்டியாயிற்று இப்போது அதே பிலிமை ஓட்டமுடியாது. விரட்டி விரட்டி அடிப்பான். என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நாடு ஒரு புதிய எழுச்சியை கண்டுவருகிறது அதை காப்பாற்ற எனது ஆட்சி தொடரவேண்டும், இல்லேனா தேசவண்டி பஞ்சராகிவிடும் என்ற வழக்கமான பிரச்சாரத்தை கிட்டத்தட்ட மிரட்டலை டிஜிட்டல் வழியாக திரும்ப திரும்ப பல வழிகளில் சொல்லி எல்லா அமெரிக்கர்களின் மனதிலும் பதித்தார். அதை செய்ய கட்சி படையை விட அரசாங்கத்தின் டிஜிட்டல் படையே உதவி செய்தது. அந்த நேரத்தில் PRISM எனப்படும் மக்களை உளவு செய்யும் ப்ரோக்ராமை NSA நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விழுந்தபோது நிறுத்துவோம், நிறுத்துவோம் என்று சொல்லிக்கொண்டே அதே PRISM மூலமாகவே மக்களின் மனதில் ஒபாமா தன்னைகொண்டு போய் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு.

எப்படி ஜான் கென்னடி தொலைகாட்சி என்ற புது மீடியம் வந்தபோது அதை சரியாக பயன்படுத்தி மக்களின் மனதில் சென்று வெற்றிபெற்றாரோ அதேபோல ஒபாமா இணையம், சமூகவலைதளம் என்ற புது மீடியத்தின் மூலம் மக்களிடம் மிக எளிதாக சேர்ந்து வெற்றிபெற்றார்.

2012 தேர்தலில் ஒபாமாவிற்கும் அவரது எதிராளி ராம்னேவிற்கும் ஒரு டிஜிட்டல் ஒப்பீடை பார்ப்போம்

நம்ம நாட்டிலும் ஒரு கட்சி அப்படி டிஜிட்டல் மார்கெட்டிங் செய்து ஆட்சியை பிடித்தது. அதை பற்றி அடுத்தவாரம் விரிவாக காண்போம்

(இந்தக்கட்டுரை ஜன்னல் பத்திரிகையில் நிறைய எடிட் செய்யப்பட்டு வெளிவந்தது. இங்கிருப்பது எடிட் செய்யப்படாத முழுமையான பகுதியின் முதல் அத்தியாயம்)

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)