நவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2

நம்ம நாட்டிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை வெற்றிகரமாக செய்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்ந்தது. அது வேறு யாருமல்ல பிஜேபி. இன்று இந்த கட்சி மிகப்பரவலாக டிஜிட்டல் மார்கெட்டிங் செய்துகொண்டே வருகிறது. தங்கள் ஆட்சியின் மீதான விமர்சனத்தை இதன் மூலமாகவே எளிதாக கடக்கிறது. இல்லையென்றால் இன்று இந்த அரசாங்கம் நிலைத்திருக்க வாய்ப்பில்லை.

டிஜிட்டல் மார்கெட்டிங் என்பது இணையத்தில் விளம்பரம் செய்வது மட்டுமல்ல அது பல படிநிலைகள் கொண்டு செயல்படும்.
உங்களை எல்லோரும் அறிய செய்வது
உங்கள் மேல் ஒரு ஆர்வத்தை உண்டாக்குவது
உங்கள் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவது
உங்களிடம் ஈடுபாடு கொள்ள வைப்பது, பேச வைப்பது
நீங்கள் வித்தியாசமானவர் என்று நம்ப வைப்பது
அவர்களை உங்களுடன் இணைப்பது
உங்களின் சிறப்பை அவர்கள் புரிந்துகொண்டு பூரிக்க வைப்பது

“உங்கள்” என்பது ஒரு தனிமனிதராக, ஒரு நிறுவனமாக, ஒரு பொருளாக, சேவையாக என்று எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது உங்களுக்கு ஒபாமா எப்படி இரண்டுமுறையும் தேர்தலில் வென்றிருப்பார் என்று புரிந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு மேலாக கூட்டணி ஆட்சியை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவில் பிஜேபி அரசு எப்படி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்திருப்பார்கள் என்பதும் புரிந்திருக்கும். உதாரணத்திற்கு மோடி 2009லேயே டிவிட்டரில் கணக்கை தொடங்கி ரெம்பவும் ஆக்டிவாக பயன்படுத்திக் கொண்டுவருகிறார். இதுவரை 15362 ட்விட்கள். இதில் காங்கிரஸ் ஐகான் ராகுல்காந்தி ரெம்ப லேட். 2015இல் தான் கணக்கை ஆரம்பித்திருக்கிறார். தேர்தல் முடிந்தபிறகே ஞானம் பிறந்திருக்கிறது போலும். இப்போது ரெம்பவும் ஆக்டிவாக தினமும் நாலு தடவையாவது ட்விட்டி கொண்டிருக்கிறார்.

மாநில கட்சிகளும் இந்தகாலகட்டத்தில் தான் டிஜிட்டல் மார்கெட்டின் அவசியத்தை புரிந்துகொண்டு முக்கிய தலைவர்கள் முகநூலில், டிவிட்டரில் கணக்கை துவங்கினார்கள். இன்னும் சில கட்சிகள் Internet Wings என்று இணைய மேலாண்மை குழுக்களை உருவாக்கினார்கள். ஆனால் இன்றும் இவை சிறப்பாக கையாளப்படவில்லை. தமிழ்நாட்டளவில் ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்

மு.கருணாநிதி (திமுக) – 737637 (பேஸ்புக்)
மு.க.ஸ்டாலின் – 1,912,698 (பேஸ்புக்)
அதிமுக – 97588 (ட்விட்டர்)
விஜயகாந்த் – 12,277 (பேஸ்புக்)
வைகோ – 1076(twitter) 146461(பேஸ்புக்)
கார்த்திக் சிதம்பரம் – 17,310(பேஸ்புக்)
EVKS இளங்கோவன் – 17,033(பேஸ்புக்)
அன்புமணி ராமதாஸ் – 294,057(பேஸ்புக்)
தமிழிசை சௌந்தர்ராஜன் – 56343(பேஸ்புக்) , 65763(twitter)
சீமான் – 31,985(பேஸ்புக்)
கனிமொழி – 45500(பேஸ்புக்)

நேரடி அரசியலுக்கு வெளியே
கமல்ஹாசன் – 1163371(டிவிட்டர்)
ரஜினிகாந்த் – 3891866 (டிவிட்டர்)

இங்கே உள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் முதலிடத்தில் திமுக மேல்மட்ட தலைவர்கள் ஸ்டாலின், கருணாநிதி மற்றும் கனிமொழி மிகச்சிறப்பாக செயல்படுகிறார்கள். டிஜிட்டலில் இரண்டாம் இடத்தில் அன்புமணி ராமதாஸ், மூன்றாம் இடத்தில் வைகோவும், நான்காம் இடத்தில் தமிழிசையும் செயல்படுகிறார்கள்.

டிஜிட்டலில் பொதுவாக திமுகவினர் மிகச்சிறப்பாகவே களப்பணி ஆற்றுகிறார்கள். ஆனால் ஒரு விசயத்தில் சொதப்பிவிடுகிறார்கள். மேல்மட்ட தலைவர்கள் மிகக்கவனமாக தேர்ந்த வார்த்தைகளால், செய்திகளால் டிஜிட்டல் மார்கெட்டிங் செய்யும்போது அதை ஊதிப் பெருக்கவேண்டியது தான் தொண்டர்களின் கடமை. மாறாக எதிர்கட்சிகள் குறிப்பாக வாக்கு பலமே இல்லாத உதிரிகட்சிகளின் தொண்டர்களுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்று டிஜிட்டல் திமுக அனுதாபிகள் காரசாரமாக இயங்கும்போது அது சொந்தகட்சியின் மீதே சேதத்தை ஏற்படுத்தி மக்கள் அபிமானத்தை குலைத்துவிடுகிறார்கள். டிஜிட்டல் மார்கெட்டிங் சர்க்கஸ் துப்பாக்கி. நல்லதும் செய்யும் கெட்ட பெயரையும் சம்பாதித்துக்கொடுக்கும். அதிமுக இந்த சீனிலேயே இல்லை என்பதால் டிஜிட்டலில் வெற்றிடம் தான். அதுவே அவர்கள் பலம். இவர்களின் டிஜிட்டல் மார்கெட்டிங் சார்பு பத்திரிக்கைகள் வாயிலாக கொண்டு செல்லப்பட்டது. மாறாக திமுக அணி தமது தொண்டர்களின் உபயத்தால் நெகடிவ் டிஜிட்டல் மார்கெட்டிங் செய்ய தேர்தலில் வெற்றி பெற வேண்டிய பல நகர்மய தொகுதிகள் கைவிட்டு போயின. மேலும் என்ன மாதிரியான கன்டென்ட் மக்களை ஈர்க்கும் என்பதில் திமுக அணியிடம் தெளிவில்லாததும் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் சொதப்ப ஒரு காரணம்.

2011 புள்ளிவிவரப்படி தமிழக மக்கள் தொகை 7.2 கோடி இன்று அது 7.5 கோடி பேர்கள் இருக்கும் என்கிறது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம். இதில் 2016 புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 2.68 கோடி பேர்கள் கொண்டு இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்டர்நெட் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 22 சதவீதம் என்கிறார்கள். இன்னொரு புள்ளிவிவரம் இந்திய மொழிகளில் அதிக இணைய பதிவுகள் தமிழ் மொழியில் தான் என்கிறது. இப்படி ஒருபுறம் இணைய தொழில்நுட்பமும், மொபைல் போன்களும் மிக மலிவான விலையில் பலரையும் சேர்ந்திருக்கிறது. இன்னொருபுறம் இந்த அருமையான வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல், காலத்திற்கேற்ப மறுசீரமைப்பு செய்யாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறது அரசியல் களம்.

தலைவர்கள் டிஜிட்டலில் ஏன் இயங்கவேண்டும் ?

• தலைவர்கள் மக்களுடன் நேரடியாக உரையாட முடிகிறது.
• தலைவர்களின் அதிகாரபூர்வ தளத்தை மக்கள் மிகவும் நம்புகிறார்கள். அதில் மீடியா திரிப்பதற்கு வேலையில்லை
• மக்களும் தலைவர்களுக்கு தங்கள் கருத்தை நேரடியாக தெரிவிக்க ஒரு தளம் கிடைத்த மகிழ்ச்சியில் உணர்வுபூர்வமாக பங்கெடுக்கிறார்கள்.
• தலைவர்களின் கருத்தை மக்கள் லைக் செய்து, பதிலுரைத்து, ஷேர் செய்து என்று பலவிதங்களில் கொண்டு சேர்க்கிறார்கள்.

• கருத்துமுரண் கொண்ட பிற தலைவர்களும், பிரபலங்களும் இதை இன்னும் பலவாறு பரப்புகிறார்கள்.
• இவை அனைத்தும் உடனுக்குடன் நடக்கிறது.
டிஜிட்டல் தளத்தின் கட்டுரைகள், பதிவுகள் அச்சு ஊடகங்களிலும் பரவலாக எதிரொலிக்கிறது, டிவி ஊடகங்களில் விவாதிக்கப் படுகிறது. ஆக இன்டர்நெட் பயனாளர்களையும் தாண்டி எல்லோரையும் சென்று சேர்க்கிறது. இன்னும் சொல்லப்போனால் எல்லா வகையான ஊடகங்களுக்கும் டிஜிட்டல் ஊடகமே ஒரு செய்திபிறப்பிடமாக இருக்கிறது.

வர்த்தகநோக்கில் பார்த்தால் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல கிளைகள் உண்டு. இணையதளம், மொபைல் ஆப் போன்றவை டிஜிட்டல் மூலப்பொருள் தான். மார்கெட்டிங் அல்ல.

இதை பற்றி வரும் வாரத்தில் விரிவாக பார்க்கலாம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)