நவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3

வர்த்தகநோக்கில் பார்த்தால் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல கிளைகள் உண்டு. இணையதளம், மொபைல் ஆப் போன்றவை டிஜிட்டல் மூலப்பொருள் தான். மார்கெட்டிங் அல்ல.

தேடுபொறி தேர்வுநுட்பம் Search Engine Optimization

உங்கள் நிறுவனத்தை சந்தைபடுத்த ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து அதில் உங்கள் பொருளை பற்றி அல்லது சேவையை பற்றி சொல்லிவிட்டால் ஆச்சா.. அது மக்களுக்கு போய் சேர வேண்டும் அல்லவா.. அது எப்படி போய் சேரும். மக்கள் Google, Yahoo, Bing போன்ற இணைய தேடுபொறிகளில் சென்று தேடினால் கிடைத்துவிடும். மக்கள் உங்கள் கம்பெனி பெயரை போட்டா தேடுவார்கள். அவர்களுக்கு தேவையான ஒன்றை தேடுவார்கள் உதாரணத்திற்கு “Catering Service in Madurai” என்று ஒருவர் தேடுகிறார். அவர் தேடியது முதல் பக்கத்தில் முதல் ரிசல்ட்டாக கிடைத்துவிட்டால் அவர் அடுத்த பக்கம் போகமாட்டார். உங்கள் நிறுவனம் தேடுபொறியின் முதல் பக்கத்தில் வர வேண்டும். அதை வரச் செய்வது தான் தேடுபொறி தேர்வுநுட்பம். அது ஒரு மில்லியன் முடிவுகளை கொடுத்தாலும் 99% சதவீதம் பேர் முதல் பக்கத்தை தாண்டி செல்லமாட்டார்கள். ஆக முதல் பக்கத்தில் முதல் முடிவாக இருக்கவேண்டியது அவசியம்

மொபைல் ஆப் தேர்வுநுட்பம் App Engine Optimization

கூகிள் ப்ளே ஸ்டோர் சென்று ஒருவர் உங்கள் நிறுவனம் தொடர்பான ஒரு மொபைல் ஆப்பை தேடுகிறார். அதில் உங்கள் நிறுவனத்தின் ஆப் முதல் முடிவாக வரவேண்டும். அதை வரவழைக்க பல நுட்பமான விசயங்களை செய்வது தான் இது

டிஜிட்டல் விளம்பரங்கள் Pay Per Click

நீங்கள் பேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, அல்லது வேறு இணைய தளங்களிலோ Sponsored, Google Ads என்று விளம்பரம் வருவதை பார்த்திருப்பீர்கள். அதை ஒருவர் கிளிக் செய்தால் அந்த நிறுவனத்தின் இணையதளத்திற்கு செல்வதை பார்க்கலாம். அது தான். திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் பேஸ்புக்கில் இதை சிறப்பாக செயல்படுத்துகிறார். அவரது தொகுதியில் அவரின் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், நாட்டு நடப்புகளை பகிர்ந்து பரவலாக எல்லோரையும் சென்று சேர அதை பேஸ்புக் ஆட்சென்ஸ்சை பயன்படுத்திக்கொள்கிறார்

டிஜிட்டல் வழி மக்கள் தொடர்பு Public Relations

சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு தேவையான ஒன்றை வழங்கி அதன் மூலம் அவர்களின் நம்பகத்தன்மையை பெற்று நிறுவனமும் பயன்பெறுவது தான் இந்த வகை மார்கெட்டிங். தமிழ்நாட்டில் ஒரு மருத்துவபரிசோதனை நிறுவனம் ஆரோக்கியம் நல்வாழ்வு என்ற பெயரில் பேலியோ டயட் குருப்பை ஆரம்பித்து உடல் பருமன் உள்ளவர்களுக்கு தீர்வை கொடுக்கிறார்கள். அவர்களின் தீர்வு நல்ல பலனை பலருக்கும் கொடுக்கவே செய்கிறது. மறுபுறம் இந்த நிகழ்வில் ஒருவர் இணைந்துகொள்ள அவர் ஒரு ரத்தபரிசோதனை ரிப்போர்ட் எடுக்க வேண்டும். அந்த ரிப்போர்டில் உள்ள பரிசோதனையை எல்லா ரத்தபரிசோதனை மையங்களிலும் எடுக்க முடியாது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்திடம் மட்டும் தான் எடுக்க முடியும். அந்தமாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். இதை Win-Win சூழல் என்பார்கள். மக்களுக்கும் வெற்றி, நிறுவனத்திற்கும் வெற்றி

சமூகவலை தளங்கள் Social Media Marketing

Facebook, whatsapp, Twitter, Google Plus, Youtube, Instagram, skype, linkedin, Quara, Blogspot, WordPress என நூற்றுக்கணக்கான தளங்கள் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டு பரவலாக இயங்கி வருகிறது. இந்த தளங்கள் அனைத்தின் மூலமாகவும், அனைத்து சாத்தியகூறுகளின் வழியாகவும் ஒரு நிறுவனத்தின் சேவையை பற்றி தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே இந்த வகை மார்க்கெட்டிங். இதன் மூலமாக வாடிக்கையாளர்களை ஈர்ப்பது, தங்களது சேவையில் கொண்டுவரப்படும் புதிய வசதிகளை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது. மக்கள் எந்த திசைக்கு சென்றாலும் அங்கு நிறுவனத்தின் பெயர் அடிபடுவது போல பார்த்துக்கொள்வது, மக்களை உரையாட அழைப்பது, நிகழ்வுகள் நடத்தி அதில் பங்குகொள்ள வைப்பது என பல விசயங்களை இதன் மூலம் சாதிக்க முடியும்.

டிஜிட்டல் உள்ளடக்கம் Content Marketing

ஒரு நிறுவனத்தை பற்றிய செய்தி, அறிவிப்புகள், கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள், பதிவுகள் தான் கன்டென்ட். டேவிட் ஓகில்வி என்ற மார்கெட்டிங் மன்னன் எழுதிய ஒரு விளம்பரகாரனின் மனம் திறந்த அனுபவங்கள் புத்தகத்தை படித்து பாருங்கள். கன்டென்ட் உருவாக்கத்தின் முக்கியத்துவம் புரியும். மக்களின் மனதில் காற்றை போல சென்று ஒரு செய்தியை அவர்கள் அறியாமலேயே பதிய வைத்துவிட்டால் அந்தப் பொருள் கண்ணில் படும்போது அது அவர்களின் விருப்பமான பொருளாக தெரியும். அதை தான் ஒரு நல்ல கன்டென்ட் உருவாக்கும். அவை ஒரு வரி பஞ்ச் லைனாக இருக்கலாம், ஒரு கதையாக இருக்கலாம், ஒரு கட்டுரையாக இருக்கலாம், ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம், காமெடியாக இருக்கலாம், ஒரு படமாக இருக்கலாம், ஒரு இசையாக, பாடலாக, ஒரு வீடியோ அனிமேசனாக இருக்கலாம். ஆனால் அடிப்படை விதி அது எல்லோரையும் ஈர்க்க வேண்டும். ஏனென்றால் இது தான் டிஜிட்டல் மார்கெட்டிங்கின் விதை

இணைத்துகொள்ளல் Affiliate Marketing

இதை ஒரு சொல்லில் சொல்வதென்றால் “தொண்டன்” . நீங்கள் ஒரு கட்சியோ, நிறுவனமோ, தனி நபரோ உங்கள் மார்கெட்டிங்கிற்கு இறங்கி வேலை செய்ய ஒரு தொண்டர்படை வேண்டும் அல்லவா. அதுவே தான் டிஜிட்டலிலும் தேவைப்படும். உங்களுக்காக அவர் மார்கெட்டிங் செய்வார் அவருடைய வட்டத்தில். அந்த தொண்டர்களை பல வகைகளில் உருவாக்கலாம். அபிமானத்தால் உருவாக்குவது ஒருவகை. பொருளாதார பலன்களை காட்டி இழுப்பது ஒருவகை. இதில் அவர்கள் நிறுவனத்தின் பொருளை, சேவையை இத்தனை பேருக்கு சென்று சேர்த்தேன் என்று ஆதாரத்தை காட்டினால் நிறுவனம் அவர்களின் பங்கை கொடுக்கும்.

 

அதிரடி மார்கெட்டிங் Viral Marketing

இது செம்ம சுவாரஸ்யமான மார்கெட்டிங். அவர் விமானநிலையத்தில் டிக்கெட் கிளியரன்ஸ்சிற்காக வரிசையில் காத்திருந்தார். அவரது முறை வந்தது. அவரது டிக்கெட்டை பரிசோதித்த பெண், புன்னகைத்தார் பின் பாட ஆரம்பித்தார். எழுந்து மேஜை மீது உட்கார்ந்து ஒரு காதலியை போல உருகி பாட அருகில் இருந்த சிலர் ஆட ஆரம்பிக்கிறார்கள். திரும்பி பார்த்தால் அவரது வரிசையில் இருந்த அத்தனை பேரும் சொல்லிவைத்தார் போல ஒரே மாதிரி ஆடுகிறார்கள். பின்னர் அவரை கையை பிடித்து இழுத்து சென்று ஒரு லாபியில் விட அங்கிருந்த விமான பணிப்பெண்கள், விமான கேப்டன் என ஒட்டுமொத்த ஏர்போர்ட்டும் ஆட ஆரம்பிக்கிறது. அங்கே ஒரு அட்டகாசமான நடன நாட்டிய அரங்கேற்றம் நடக்கிறது. அந்த பயணிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ஆனால் செம்ம ஜாலியாக இருக்கிறது. அவரை ஒரு ராஜாவை போல பாவித்து ஒரு விமான நிலையமே ஆடினால் எப்படி இருக்கும். இறுதியில் திரை விலகுகிறது. அந்த பிளைட் நிறுவனர்கள் தோன்றி நீங்கள் எங்கள் 500,000ஆவது பயணி என்று கூறி அவருக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். அங்குள்ள அனைவருக்கும் கேக் வழங்கப்படுகிறது. இது பலரால் வீடியோ எடுக்கப்பட்டு மக்களால் பரப்பப்படுகிறது. மறுநாள் தொலைக்காட்சி செய்திகளிலும் வருகிறது. அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிறுவனத்தின் பிளைட் அனைத்தும் ஹவுஸ்புல். இது தான் வைரல் மார்கெட்டிங்

 

செல்வாக்குமிக்கவர் Influencer Marketing

பிரபலங்கள் மூலமாக விளம்பரம் செய்வதை தானே சொல்கிறீர்கள்? என்றால் நிச்சயம் இல்லை. டிஜிட்டல் மார்கெட்டிங் எதையும் நேரடியாக செய்வதில்லை என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நேரடி விளம்பரங்களை மக்கள் டிஜிட்டலில் விரும்புவதில்லை. உங்கள் நிறுவனத்தின் இலக்கு எதுவோ அந்த சந்தையில் சிலர் ஏற்கனவே நன்கு அறிமுகமாகி இருப்பார்கள். அல்லது சில இணையதளங்கள் நன்கு அறிமுகமாகி இருக்கும். அவர்களின் துணைகொண்டு உங்கள் வாடிக்கையாளர்களிடம் உரையாடுவது. அதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் பெயரை வாடிக்கையாளர் மனதில் திணிப்பது. இதற்கு பல கட்டங்களில் வேலை செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் இந்த இன்புளுயன்சர்களை அழைத்து ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்வார்கள். அதில் நிறுவனங்களின் புதிய பொருளை அறிமுகப்படுத்தி அதன் சிறப்பை எடுத்துக்கூறுவார்கள். சில கறார் பேர்வழிகள் அந்த கூட்டத்திலேயே கழுவி ஊற்றுவார்கள். அப்படி ஊற்றினாலும் இன்முகத்துடன் அவர்களுக்கு பதிலுரைப்பார்கள். டெக்னாலஜி ப்ளாக்கர்கள், கேட்ஜெட் விரும்பிகள் சந்தையில் எந்த புதுப் பொருள் வந்தாலும் உடனே அதை அக்குவேறு ஆணிவேராக பிரித்து எழுதுவார்கள் அல்லது வீடியோ போடுவார்கள். இந்த வகை மார்கெட்டிங்கிற்கு அவர்கள் தான் சிறந்த உதாரணம். ஆப்பிள் ஐபோன் பற்றி யூடியுப்பில் தேடிப்பாருங்கள் கம்பெனிகாரன் விளம்பரத்தை இவர்கள் தான் அதிகம் பேசி விளம்பரம் செய்திருப்பார்கள்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் உங்களின் செய்தி எத்தனை பேரை சென்று சேர்க்கிறது என்பதை பொறுத்து உங்கள் மதிப்பு அளவிடப்படுகிறது. இன்று ஒரு தனிநபராக நீங்கள் பிரபலமடைய விரும்பினால் கூட அதை டிஜிட்டல் உலகம் எளிதில் நிறைவேற்றிவிடும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மக்களை ஈர்க்கும் தரமான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்துவருவது மட்டுமே. அவை எழுத்தாக, வீடியோவாக, ஒலிக்குறிப்பாக, படமாக என்று எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாம். உங்களின் பதிவில் உள்ள புதுமையும் நம்பகத்தன்மையும் பலரை ஈர்த்து அதை அவர்கள் பகிர இன்னும் பலரிடம் சென்று சேர்க்கிறது. அது பிற ஊடகங்களுக்கும் கொண்டு சென்று உங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது.
நான் மாத சம்பளம் வாங்கும் ஒரு தனிநபர். எனக்கெதற்கு டிஜிட்டல் மார்கெட்டிங்? என்று கேட்கலாம். உங்களுக்கும் இது மிக அவசியம். முன்பெல்லாம் உங்கள் பயோடேட்டாவை அனுப்ப சொல்வார்கள். இப்போது உங்களது லின்கிடின் (Linkedin) பக்கத்தை அனுப்ப சொல்கிறார்கள். அதில் உங்களது கல்வித்தகுதி, பணி விவரங்கள் மட்டுமல்ல. உங்கள் நிறுவனம், உங்களுடன் உடன் பணியாற்றுபவர்கள், உங்களது திறன், உங்களது மேலதிகாரியின் பரிந்துரை, நீங்கள் எழுதிய கட்டுரை, வெளியிட்ட புத்தகங்கள், கலந்துகொண்ட நிகழ்வுகள் எல்லாம் உயிர்ப்புடன் பார்க்கமுடியும் என்பதால் உங்களை பற்றிய நம்பகத்தன்மை மேலும் கூடுகிறது. ஆக உங்களது பக்கத்தை அடிக்கடி புதுப்பிக்கும்போது உங்கள் திறனுக்கேற்ற நீங்கள் வேலையை தேட வேண்டியிருக்காது வேலை உங்களை தேடும்.

இதுவே நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்து கொடுக்கும் ஒப்பந்த பணியாளர் (Freelancer) என்றால் லின்க்கிடின் மட்டும் போதாது. உங்களது Twitter, Flickr, Facebook Page, Blogger எல்லாம் பகிர வேண்டியிருக்கும். அது உங்களுக்கு நிறைய குறுகியகால வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும். நீங்கள் எந்தளவுக்கு உங்களது பணி நிமித்தமான கட்டுரைகளை, பதிவுகளை அதிகம் எழுதுகிறீர்களோ அந்தளவுக்கு உங்களது தொழில்வல்லுநர் பிம்பம் வளரும். அவை பல புதிய வாசல்களை திறந்துவிடும்.

இணைய தொழில்நுட்பமும், சமூகவலை தளங்களும் ஒரு கருவி தான். தீதும் நன்றும் சமூகவலைதளங்கள் தர வேண்டியதில்லை. அந்தக் கருவியை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது நமது குணமும் மனமும். நமது கண் முன் மிக அருமையான வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சமூகத்தையும் தனிமனித வளத்தையும் மேலும் மேலும் முன்னேற்றமுடியும்.

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

வள்ளுவர் சொன்ன இந்த குறளை நாம் இந்த 21ஆம் நூற்றாண்டில் இப்படிதான் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின், உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கும் ஏனைய தோல்விக்கும் ஆதாரமாக உங்களின் சமூகவலைதளங்களே சாட்சியாக இருக்க கூடும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)